அரசு சுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை-பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்


அரசு சுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை-பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 27 Jun 2023 6:46 PM GMT)

அரசு சுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

அரசு சுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகர்மன்ற கூட்டம்

பரமக்குடி நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் மீரா அலி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நடந்த விவாதம் பற்றிய விவரம் வருமாறு:-

ஜீவரத்தினம்:(தி.மு.க) புதுநகர் பகுதியில் ரூ.45 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. ஆனால் அதற்கான பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஏன் இதை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை?

ஆணையாளர்: அதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாக்கியம்: (ம.தி.மு.க) காட்டுப் பரமக்குடியில் இருந்து கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. என்ன காரணம்?

தலைவர்: அப்பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவைகளை அகற்றினால் தான் தூர்வாரும் பணி முழுமையாக மேற்கொள்ள முடியும்.

சட்டரீதியான நடவடிக்கை

வடமலையான் (அ.தி.மு.க):அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்து வருகின்றனர். அதற்கு நகராட்சி நிர்வாகத்தில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? அனுமதி பெறாமல் எழுதியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 32-வது வார்டில் பல இடங்களில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி வயர்மேனிடம் கேட்டால் லைட் ஸ்டாக் இல்லை என்று கூறுகிறார். எங்கள் சொந்த பணத்தில் லைட் வாங்கி கொடுக்கிறோம்.

தலைவர்: அனுமதி பெறாமல் அரசு சுவர்களில் விளம்பரம் செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பானுமதி (பா.ஜ.க) : பரமக்குடி நகராட்சியின் ஒரு ஆண்டுக்கான வருமானம் எவ்வளவு? எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது? என்ற விவரத்தை அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

ஆணையாளர்: அடுத்த கூட்டத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும். தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேசினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story