கடல் அட்டைகளை பிடித்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை-வனத்துறை அதிகாரி எச்சரிக்கை
மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் அட்டைகளை பிடிப்பதால் மீன்வளம் குறைந்து வருவதாக வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கீழக்கரை
மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் அட்டைகளை பிடிப்பதால் மீன்வளம் குறைந்து வருவதாக வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடல் அட்டைகள்
கீழக்கரை வனச்சரகர் செந்தில்குமார் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் வாழும் ஆயிரக்கணக்கான உயிர் இனங்களில் அதிசயமான உயிரினம் கடல் அட்டை. கடலில் கலக்கும் கழிவுகளை உள்வாங்கிக் கொண்டு காரத்தன்மை, அமிலத்தன்மை கொண்ட நீரை கடல் அட்டை வெளிப்படுத்தும். இந்த நீரில் கடலில் வாழும் மீன்கள், மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கு தேவைக்கேற்ப நல்ல சுவாசம் கிடைக்கும்.
கழிவுகளை மட்டுமே தின்று கடலை சுத்தமாக வைத்து கொள்ளும் கடல் அட்டைகள், கடலில் மண்ணுக்கடியில் 2 அடி ஆழப்பகுதியில்தான் உயிர் வாழும். மேலும் அதன் ஆயுள் காலம் 1½ ஆண்டுகள் மட்டுமே. இந்தநிலையில் ஆறு மாதங்கள் கருவுற்று இருக்கும். கடல் அட்டை உயிரிழக்கும் போது 150 முதல் 200 வரை இனப்பெருக்கம் செய்துவிட்டு இறந்து விடும்.
நடவடிக்கை
சமீபகாலமாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கடல் அட்டைகள் பெரும்பாலானவை கருவுற்ற நிலையில் இருந்தன. கடல் அட்டைகள் அழிவதால் கடலோர பகுதிகளில் கடல் நிறம் மாற்றம் ஏற்படுதல், மீன்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உயிரிழந்து கரை ஒதுங்குதல், கடல் துர்நாற்றம் வீசுதல் போன்ற விளைவுகள் அதிகம் ஏற்படும். சினை கொண்ட அட்டையை பிடித்து பதப்படுத்தி சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தைவான் போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களுக்கு துணை போகும் நபர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.