கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவிழா நாட்கள், நீண்ட அரசு விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் கூடுதல் அரசு பஸ்களை இயக்கி பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு கூடுதலாக அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500 முதல் 1,000 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போக்குவரத்துத்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்துத்துறை சார்பில் இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டு இது போன்று புகார் வந்தபோது நானே நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். அதன் பிறகு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்தால் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.