உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை - தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு


உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை - தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு
x

உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு விடுத்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் சென்னைப் பெருநகர் பகுதிகள் கசடு மேலாண்மை (ஒழுங்கு) விதிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையின்படி மாநகராட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் லாரிகள் மட்டுமே இயங்க அனுமதி உள்ளது. அதன்படி தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் லாரிகளை இயங்க மாநகராட்சியிடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு பதிவு சான்றிதழ் பெறாத லாரிகள் மீது தாம்பரம் மாநகராட்சி மற்றும் காவல் துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்த 34 கழிவுநீர் அகற்றும் லாரிகளுக்கு மாநகராட்சியால் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவு சான்றிதழ் பெறாத 8 கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு காவல் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீரினை அகற்றிட பெருங்களத்தூர் மண்டலம் மண்ணூரான்குளம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது கால்வாய்களிலோ, நீர் நிலைகளிலோ, ஆற்றுப் படுகைகளிலோ கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story