போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

அணைக்கட்டு பகுதியில் கிளீனிக் நடத்தும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

வேலூர்

அணைக்கட்டு பகுதியில் கிளீனிக் நடத்தும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 364 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

போலி டாக்டர்கள்

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அணைக்கட்டு தொகுதி பொறுப்பாளர் கோட்டி என்கிற கோவேந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அளித்த மனுவில், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காத பலர் கிளீனிக் வைத்துள்ளனர்.

சித்தா, அலோபதி மருத்துவம் படித்து முடித்து விட்டு சிலர் கிளீனிக்குகளில் அறுவை சிகிச்சை மற்றும் கருக்கலைப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தி போலி டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நிவாரண நிதி

கூட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண நிவாரண நிதி ரூ.5 லட்சம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சீதா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மயங்கி விழுந்த பெண்கள்

குறைதீர்வு கூட்டத்தில் குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த லில்லி (வயது 60) என்பவர் தனது கணவரின் இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தார்.

மனுஅளித்த சிறிதுநேரத்தில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து லில்லிக்கு 108 ஆம்புலன்ஸ் செவிலியர் முதலுதவி அளித்தார். இதையடுத்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அதேபோன்று வேலூர் சத்துவாச்சாரி புத்தர்தெருவை சேர்ந்த ஆனந்தி (52) என்பவர் தனது இடத்தை ஏமாற்றி விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு அளிக்க வந்தார்.

திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். ஆனந்திக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த 2 பெண்கள் மயங்கி விழுந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story