தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டரிடம் மனு


தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டரிடம் மனு
x

Actionநடவடிக்கை

திருச்சி

திருச்சி, ஜூன்.14-

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவராசு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் அம்பிகாபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் வாயில் கருப்புத்துணி கட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அதிக கட்டணம் வசூல்

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அரசு அறிவித்த கட்டணத்தை மீறி அளவுக்கு அதிகமாக பெற்றோரிடம் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். கொரோனா காலத்தில் சிரமத்தில் இருந்து இப்போது தான் மக்கள் மீண்டும் வருகிறார்கள்.

மேலும், அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கலாம் என பெற்றோர் நினைத்தாலும் நிலுவை தொகையை கட்டினால் தான் மாற்றுசான்றிதழ் தர முடியும் என அலைக்கழிக்கிறார்கள். ஆகவே அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

257 மனுக்கள்

திருச்சி மாவட்டம் திருமலைசமுத்திரம் முள்ளிப்பட்டி வெக்காளியம்மன்நகரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதேபோல் இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றுகள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வழக்கத்தைவிட மனு அளிக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story