சீமான் மீதும், அவருடைய கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;அருந்ததிய சமூகத்தினர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு


சீமான் மீதும், அவருடைய கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;அருந்ததிய சமூகத்தினர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு
x

சீமான் மீதும், அவருடைய கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருந்ததிய சமூகத்தினர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தாா்.

ஈரோடு

ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த அருந்ததிய சமூகத்தினர், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

அருந்ததியர் சமூக மக்களாகிய நாங்கள் தோல் பொருட்கள் தயார் செய்து வருகிறோம். கடந்த 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்களது சமூகத்தை சாதி ரீதியாக இழிவு படுத்தும் வகையில், துப்புரவு பணி செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் தான் அருந்ததியர்கள் என்று பேசி உள்ளார். இதனால் ஆதித்தமிழர்களான அருந்ததியர் சமூகத்தை சார்ந்த எங்களுக்கு வேதனையும், அவமானமும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் முதன்மை களப்போராளியாக உயிர் தியாகம் செய்த மாமன்னர் ஒண்டிவீரன், வீரத்தாய் குயிலி, மாவீரன் பொல்லான் உள்ளிட்ட ஆதித்தமிழர்களான அருந்ததியர் சமூக வீரர்களுக்கு மணிமண்டபங்கள் அமைத்து தமிழ்நாடு அரசு போற்றி வரும் இந்த சூழலில் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தி சீமான் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசி வருகிறார்.

மேலும் அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிக்க செல்வதாக வரும் சீமான் கட்சியினர் சீமான் பேசியதையே அருந்ததியர்கள் துப்புரவு பணிக்காக ஆந்திராவில் இருந்து கொண்டு விடப்பட்டதாக அம்மக்களிடையே வீண் பதற்றத்தையும், சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்காக முயற்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகரில் 35 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட 100-க்கும் மேற்பட்ட அருந்ததியர் பகுதி மக்களிடையே தொடர்ந்து இவ்வாறு சாதி ரீதியாக வெறுப்பு பிரசாரம் செய்து வருவது மிகப்பெரிய சமூக பதற்றத்தை உருவாக்கும். எனவே சீமான் மீதும் அவருடைய கட்சியினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story