உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்த உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சி வக்கீல்கள் மனு
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்த உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சி வக்கீல்கள் மனு அளித்தனா்.
திண்டிவனம்,
விழுப்புரம் முன்னாள் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் வக்கீல் அசோகன் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள ஒரு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பொதுவாக சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியதற்காக அவருடைய தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா அறிவித்து உள்ளார். இந்த கொலை வெறி பேச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பேசி உள்ளனர்.
தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்து வருகின்ற இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு 3 பேரும் பேசி உள்ளனர். இதனால் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தை தூண்டும் வகையில் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வக்கீல்கள் உடனிருந்தனர்.