கன்னியாகுமரியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கன்னியாகுமரியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசை, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
ஒரு காலத்தில் நீர் நிரம்பி காணப்படும் செழிப்பான பகுதியாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டம், இன்று தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும், பொதுமக்களுக்குத் தேவையான குடிதண்ணீர் கிடைக்காமலும் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு, உடைப்புகள் சரிசெய்யப்பட்ட பின்னர்தான் தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், தற்போதுள்ள தி.மு.க. ஆட்சியில் இந்தக் கால்வாய்களில் எந்தவித தூர்வாரும் பணிகளும், உடைப்புகளை சரிசெய்யும் பணிகளும் நடைபெறவில்லை.
மக்கள் தவிப்பு
எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் பாசனப் பணிகள் நடைபெற்றன. ஆனால், தி.மு.க. ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தவிதமான தூர்வாரும் பணிகளும் நடைபெறாததால், கடந்த ஆண்டு 14,250 ஏக்கரில் மட்டும் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு சுமார் 10,500 ஏக்கரில் மட்டும் பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3,750 ஏக்கர் பாசனப் பரப்பு குறைந்துள்ளது.
நாகர்கோவில் மாநகருக்கு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பொதுமக்களுக்கு குறைபாடின்றி குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. கோடை காலத்திலும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்ற அவல நிலை இருப்பதால், மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நடவடிக்கை வேண்டும்
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பை கடந்த 2018-ம் ஆண்டில் நான் வெளியிட்டேன். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க, புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு, அம்ருத் திட்டத்தின் மூலம் ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, எங்கள் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்று 27 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பணிகள் நிறைவு பெறவில்லை.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் இந்த தி.மு.க. அரசு, இந்தத் திட்டத்திற்கும் மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இனியாவது குடிநீர் பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து, நாள்தோறும் நாகர்கோவில் மக்களுக்கு குடிதண்ணீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் உடனடியாக மாவட்டம் முழுவதும் அனைத்து கால்வாய்கள் மற்றும் குளங்களையும் தூர் வாரி குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கி, விவசாயிகளின் நீர் ஆதாரத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் பெருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.