மோசடி பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை - அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மோசடி பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடியைச் சேர்ந்த அருசியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது உடன் பிறந்தவர்கள் 5 பேர். எனது தந்தை நூர்முகம்மதுக்கு சொந்தமான சொத்து கீழக்கரை தாலுகா, காஞ்சிரங்குடி கிராமத்தில் உள்ளது. எனது தந்தை 1983-ம் ஆண்டில் இறந்தபின்பு அவரது வாரிசு என்ற அடிப்படையில், அந்த சொத்தை அனுபவித்து வருகிறேன். இந்தநிலையில் அந்த சொத்தை நானும், என் உடன் பிறந்தவர்களும் பிரித்துக்கொள்ள முடிவு செய்து, ஆவணங்களை சரிபார்த்தோம். அப்போது மோசடியாக வேறு சிலரின் பெயரில் பட்டா மாற்றி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பட்டாவை ரத்து செய்யும்படி ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, கீழக்கரை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் சொத்தை மோசடியாக பட்டா மாற்றியதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது ஆஜராகி, சொத்தை உரிமையாளர்கள் அனுபவித்து வந்த நிலையில், மோசடியாக பட்டா மாற்றப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க இயலாது. உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
முடிவில், மனுதாரரின் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து மோசடி பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.