277.41 ஹெக்டர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை


277.41 ஹெக்டர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை
x

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 277.41 ஹெக்டர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

கலெக்டர் ஆய்வு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் விளை நிலமாக மாற்றுவதற்காக சிறுவாச்சூர் ஊராட்சியில் கண்டறியப்பட்டுள்ள 10 ஏக்கர் தரிசு நிலத்தினை கலெக்டர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் மானிய உதவியுடன் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ள சம்மங்கி வயலினை பார்வையிட்டார். இதுகுறித்து கலெக்டர் கற்பகம் கூறியதாவது:-

277.41 ஹெக்டர் தரிசு நிலங்கள்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் 25 கிராம ஊராட்சிகள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராம ஊராட்சிகளில் தரிசு நிலங்களை கண்டறிந்து, அவற்றை விளை நிலங்களாக மாற்றும் வகையிலான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. 2021-22-ம் நிதி ஆண்டில் 92 விவசாயிகளின் 154.66 ஹெக்டர் தரிசு நிலங்களும், 2022-23-ம் நிதி ஆண்டில் 105 விவசாயிகளின் 122.75 ஹெக்டேர் தரிசு நிலங்கள் என மொத்தம் 277.41 ஹெக்டர் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை விளை நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தரிசு நிலங்களை திருத்தி, விவசாயம் செய்ய தேவையான நீர்வரத்திற்காக கிணறு அமைத்தல், மோட்டார் அமைத்தல், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன வசதிகள் செய்தல், பயிரிட தேவையான தோட்டக்கலை பயிர்களுக்கான விதைகளை இலவசமாக வழங்குதல் என பல படிநிலைகளுடன் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்படுகிறது.

நுண்ணீர் பாசன திட்டம்

நடப்பாண்டில் இத்திட்டத்தின் மூலம் சிறுகன்பூர், டி.களத்தூர், எலந்தலப்பட்டி, தெரணி, கொளத்தூர், திம்மூர், நொச்சிக்குளம், கண்ணப்பாடி, கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை, களரம்பட்டி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, பெரிய வடகரை, தழுதாழை, தொண்டப்பாடி, எறையூர், பெரியவெண்மணி, வடக்கலூர், அந்தூர், ஆண்டிக்குரும்பலூர், ஒதியம் மற்றும் குன்னம் ஆகிய கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.2,040.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் போன்ற வசதிகள் ரூ.374.30 லட்சம் மதிப்பீட்டில் 736 விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 736.68 எக்டர் விவசாய நிலங்கள் பயன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story