பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
x

போதைப் பொருட்களின் தீமை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி

போதைப் பொருட்களின் தீமை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் முன்னிலைவகித்தார்.

கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன், கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலெக்டர் சாத்தி பேசியதாவது:-

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்தும், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முழுமையாக ஏற்படுத்திட வேண்டும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்க வேண்டும்.

தடுப்புக் குழு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறையுடன் இணைந்து நடத்திட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களை கொண்டு போதைப்பொருள் தடுப்புக்குழு அமைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவேண்டும்.

போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, கலால் உதவி ஆணையர் தணிகாசலம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மனநல மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், போதை தடுப்பு மீட்பு தன்னார்வர்கள், ரோட்டரி கிளப் தன்னார்வர்கள், தெண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story