மின்வாரிய குறைபாடுகளை களைய நடவடிக்கை
மின்வாரிய குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊட்டியில் நடந்த நுகர்வோர் காலாண்டு கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கூடலூர்
மின்வாரிய குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊட்டியில் நடந்த நுகர்வோர் காலாண்டு கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
நுகர்வோர் கூட்டம்
நீலகிரி மாவட்ட மின் பகிர்மான வட்டம் சார்பில், மின்வாரிய நுகர்வோர் காலாண்டு கூட்டம் ஊட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் கூடலூர் சதீஷ், ஊட்டி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்தொரை, புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், ஊட்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் போஜன் ஆகியோர் கலந்து கொண்டு மின்வாரியத்தின் பல்வேறு குறைபாடுகளை எடுத்து கூறினர்.
மின்மீட்டர் கணக்கீடு
அப்போது அவர்கள் கூறியதாவது:-
வீடுகள், வணிக நிறுவனங்களில் மின் மீட்டர் தவறாக கணக்கீடு செய்யப்படுகிறது. மேலும் பல இடங்களில் நேரடியாக சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதில்லை. இதேபோல் ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு பள்ளி பகுதி உள்பட மின் கம்பிகள் தாழ்வாக செல்லும் இடங்களை கண்டறிந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் பகுதியில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
மின்வாரியத்தில் உள்ள குறைபாடுகளை களைய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். மின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அடிக்கடி மின்சார வினியோக குறைபாடுகள் ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்த சூழல் உருவாகாது. வரும் 10-ந் தேதி மின்தடை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்பின்னர் முழுமையாக சரியாகும். புதிய மின் கட்டண விகிதங்கள் வந்தவுடன் அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மின் கட்டணங்களை இணைய வழியில் எளிதில் கட்டலாம். மேலும் மின்வாரிய சேவைக்கான கட்டணங்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து செலுத்தலாம். அதனால் எளிதாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும், இவ்வாறு அவர்கள் கூறினர்.