திட்டப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை


திட்டப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த 10 திட்டப்பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

உத்தரவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய 10 திட்டப்பணிகளின் பட்டியலை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்குமாறும் திட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 திட்டப்பணிகளின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.

தாமதம்

ஆனால் மாவட்ட நிர்வாகம் இத்திட்ட பணிகளை ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய நிலையில் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் தாமதமாகும் நிலை உள்ளது. விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசன், கவுசிகமா நதி புனரமைப்பு, ஆனைக்குட்டம் அணை ஷட்டர் சீரமைப்பு உள்ளிட்ட 10 திட்டப் பணிகளை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். ஆனாலும் இத்திட்டப் பணிகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

கோரிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த திட்ட பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திட்டப்பணிகளை நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்கீடு தேவைப்படும் பட்சத்தில் அரசுக்கு உரிய பரிந்துரை அனுப்பி நிதி ஒதுக்கீடு பெற்று திட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story