விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டிவனத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோாிக்கை வைத்தனர்
திண்டிவனம்
குறைதீர்ப்பு கூட்டம்
திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் திண்டிவனம், மயிலம், செஞ்சி, மரக்காணம் விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திண்டிவனம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும், விலைப்பட்டியலை எழுதி வைக்க வேண்டும், திண்டிவனம் பகுதியில் உரதட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அமைதி பேச்சுவார்த்தை
இதற்கு பதில் அளித்து பேசிய தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், தற்போது ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளை வைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வியாபாரிகள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தவிர நம் பகுதியில் உள்ள வியாபாரிகள் யாரும் பொருட்களை எடுப்பதில்லை. இதனால் அவர்களின் விலைக்கு ஏற்ப விவசாயிகள் விளைபொருட்களை கொடுக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார். இதற்கு விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சப்-கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் விவசாயம் செய்யும் இளைஞர்கள், ஆண் பெண் பட்டதாரிகள், விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.