திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை


திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 15 ஆயிரம் பனைமரக்கன்றுகள் நடுவதற்கு நர்சரி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் கூறினார்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் அலையாத்தி காடுகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 15 ஆயிரம் பனைமரக்கன்றுகள் நடுவதற்கு நர்சரி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் கூறினார்.

அதிகாரிகள் மாநாடு

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசியது தொடர்பாக வன அலுவலர் ஸ்ரீகாந்த் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மரகத பூஞ்சோலை திட்டம்

தமிழக அரசு பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு அதிக முக்கித்துவம் அளித்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அரசு பசுமை இயக்கம் சார்பில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மரகத பூஞ்சோலை என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் 4 இடங்களில் மர பூங்கா உருவாக்கப்படும். இந்த பூங்கா பொதுமக்களுக்கு பயனுள்ளதாகும். பொழுதுபோக்கு இடமாகவும் அமைக்கப்படும்.

15 ஆயிரம் பனைமரக்கன்றுகள்

கிழக்கு கடற்கரையோரத்தில் பனை மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக பனை விதைகள் கொண்டு மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடுவதற்கான நர்சரி தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகள் சற்று வளர்ந்த நிலையில், நடுவதன் மூலம் அதன் வளர்ச்சி என்பது நிச்சயம் பயன்தரும்.

அலையாத்தி காடுகள் மறுசீரமைப்பு பணிகள்

குறிப்பாக முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் என்பது இயற்கை கொடுத்த வரம். இந்த அலையாத்தி காடுகளை மேம்படுத்தி, மறுசீரமைப்பு பணிகள் 800 எக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. இங்கு வாழும் பறவைகளுக்கு எந்தவித பாதிப்புமின்றி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக வனத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து அலையாத்தி காடுகளை மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வனத்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டித்தர வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தியுள்ளோம். முத்துப்பேட்டை கடற்கரையோர வனப்பகுதியை கண்காணிப்பு, பாதுகாப்பு பணிக்காக புதிதாக படகுகள் வசதி வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story