அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
சேலம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 30-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுவது குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். அதன்படி செவ்வாய்பேட்டை தாண்டவராயன் தெருவில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சத்து மாவு உள்ளிட்டவைகள் சரியாக வழங்கப்படுகிதா? என்று கேட்டு அறிந்தனர்.
தொடர்ந்து சோமாபுரி அக்ரகாரம், சாய்பாபா தெரு, மஜீத் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர். பின்னர் பங்களா தெரு, அச்சிராமன் தெரு, முத்தவள்ளி இப்ராகிம் தெரு, கபிலர் தெரு, ராஜா தியேட்டர் கார்னர் பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.
சாக்கடை கால்வாய்
அப்போது மஜீத் தெருவில் 90 மீட்டர் நீளத்திற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்தில் மழைநீர் வடிகால் வசதியுடன் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க உத்தரவிட்டனர். கபிலர் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கவும், அப்பகுதியில் கல்வெட்டுகள் அமைத்தல், சாக்கடை தூர்வாருதல் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்..
இந்த ஆய்வில் அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் உமாராணி, பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி செயற்பொறியாளர் சிபி சக்ரவர்த்தி, 30-வது வார்டு கவுன்சிலர் அம்சா உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.