அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை


அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பதவி ஏற்ற கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பதவி ஏற்ற கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

183-வது கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சமீரன் சென்னை மாநகராட்சியின் பணிகள் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்த கிராந்திகுமார் பாடி கோவை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை முன்னாள் கலெக்டர் சமீரன் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் கிராந்திகுமார் பாடி கோப்புகளில் கையெழுத்திட்டு கோவையின் 183-வது கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு முன்னாள் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பொதுமக்கள் குறைகள்

இதன்பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய முன்னுரிமை அளிக்கப்படும்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மாவட்டத்தில் உட்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானாவை சேர்ந்த கலெக்டர் கிராந்திகுமார் பாடி 2015-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார்.

இவர் மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். 2011-ம் ஆண்டு நடந்த சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் 35-வது இடம் பிடித்து சாதித்தார்.

பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்றதும் அஞ்சல் துறையின் உதவி செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட சப்-கலெக்டர், வணிக வரித்துறை இணை இயக்குனராகவும் பதவி வகித்தார்.

தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு வகித்த அவர் கோவையின் இளம் கலெக்டராக தற்போது பதவி ஏற்றுள்ளார்.


Next Story