தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தகவல்


தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தகவல்
x

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார்.

சென்னை

தாம்பரம் மாநகராட்சி புதிதாக உருவாக்கபட்டதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி எல்லையில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புனித தோமையார் மலை, அனகாபுத்தூர், திருநீர்மலை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உட்பட 15 அரசு பள்ளிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்|டது. இந்த 15 பள்ளிகளிலும் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும், பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நேற்று அனகாபுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தலைமையில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மண்டல குழு தலைவர் பம்மல் வே.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு பள்ளிகளை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறுகையில், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 15 ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் பணிகள் செய்து தரப்பட உள்ளது என்றார்.


Next Story