சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை
மசினகுடி, ஆனைக்கட்டியில் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் தெரிவித்தார்.
ஊட்டி
மசினகுடி, ஆனைக்கட்டியில் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் தெரிவித்தார்.
குறைதீர்ப்பு கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
அமலநாதன்:- நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சிறுதானிய முன்னுரிமை சிறப்பு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.
தோட்டக்கலை இணை இயக்குனர்:- இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க இந்த வருடம் ரூ.5 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மசினகுடி, ஆனைக்கட்டி கிராமத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரகாஷ்:- தோட்டக்கலைத்துறையில் உள்ள அட்மா திட்டத்தில் விவசாயிகள் எத்தனை பேர் உள்ளனர்?. நீலகிரியில் பயிர் காப்பீடு, நஷ்ட ஈடு பல வருடமாக விவசாயிகளுக்கு வரவில்லை.
இணை இயக்குனர்:- 2019 காரிப் பருவத்திற்கான இழப்பீடு தொகையாக 1,736 விவசாயிகளுக்கு ரூ.5¾ கோடி வழங்கப்பட்டு உள்ளது.
தேனீ பெட்டி
ராமச்சந்திரன்:- பயிர் சாகுபடி செய்ய மற்றும் நாற்றங்கால் அமைக்க பச்சை வலை மானிய திட்டத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?. தேனீயுடன் தேனீ பெட்டி மானியத்தில் வழங்கப்படுமா?.
இணை இயக்குனர்:- 2023-2024-ம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் நிழல்வலை குடில் 50 சதவீத மானியத்தில் அமைக்க இலக்கு பெறப்பட்டு உள்ளது. இதற்கு விவசாயிகள் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் மூலம் தார்பாலின் மானியத்தில் வழங்க அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. 2022-2023-ம் ஆண்டில் 20 பயனாளிகளுக்கு தேனீ பெட்டி வழங்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு கருத்துரு
ரகுநாதன்:- கடந்த பருவத்தில் கூடலூர் வட்டாரத்தில் பாகற்காய் பயிர் கடும் சேதம் அடைய காரணம் என்ன?.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர்:-
கடந்த ஆண்டில் பயிரிடப்பட்ட பாகற்காய் செடிகள் பரவலாக மஞ்சளாகி வருவதை தொடர்ந்து வேளாண்மை அறிவியல் மையம் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அஸ்வினி, தத்துப்பூச்சி பயிரை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் 93 விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.
கக்கி சண்முகம்:-
கோத்தகிரி மார்க்கெட் அருகில் உழவர் சந்தை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டும், இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை?
வேளாண்மை துணை இயக்குனர்:- கோத்தகிரியில் விவசாயிகளின் நலன் கருதி மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக இடம் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்காக கலெக்டர் அலுவலகத்தில் கோப்பு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.