ஆய்விற்கு பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை


ஆய்விற்கு பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை
x

ஆய்விற்கு பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

விருதுநகர்


ஆய்விற்கு பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

பால் விலை

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் கொள்முதலை அதிகப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு பல கோடி ரூபாய் கடன் தாட்கோ, டாம்கோ, டாம் செட் கோ, மகளிர்திட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. ஆய்வுக்கு பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாய்வு செய்து பால் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திசை திருப்ப முயற்சி

கடந்த ஆட்சிக்காலத்தில் ஆவினில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருவதால் நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் அம்மோனியா கசிவு ஏற்பட்டது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளேன். எந்திரத்தில் ஏற்பட்ட சிறு பழுது காரணமாக இது நடந்துள்ளது. எனினும் தொழில்நுட்ப தர உயர்வுக்கு ஐ.ஐ.டி. நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஆவின் நிறுவனங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் அரசியல் சட்ட அதிகார வரம்பு மீறி பலமுறை பேசி வருகிறார். மணிப்பூர் பற்றி எரிகிறது. அதுபற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் திசை திருப்பும் முயற்சியாக மத்திய அரசு கவர்னர் மூலம் அரசியல் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையிலும், கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையிலும் மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரிமம்பெறாத நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதை தடுக்கவும், பால்பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஆலோசனை குழு மூலம் ஆவின் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து விருதுநகர் சூலக்கரையில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.


Next Story