மாவட்டத்தில் பசுமை வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் பசுமை வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பசுமை வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மரக்கன்றுகள் நடும் விழா
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளியில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு ஊராட்சி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
பசுமை தமிழ்நாடு இயக்கமானது தமிழகத்தின் பசுமை பரப்பை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட மாபெரும் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசால் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
33 சதவீதமாக உயர்த்த
வேளாண் காடுகளை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் நீடித்த வருமான வாய்ப்புகளை மேம்படுத்தி தனியார் நிலங்களில் பசுமை போர்வையை அதிகப்படுத்துதல், தரம் குன்றிய வனப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிலையான பருவ நிலை மாற்ற தணிப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2021-ன் படி 28.09 சதவீதம் வனப்பரப்பை கொண்ட மாவட்டமாக உள்ளது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் தரம் குன்றிய வனப்பகுதிகள், நகர்ப்புறங்கள், பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோவில் மைதானங்கள், தொழிற்சாலைகள், பள்ளத்தாக்கு பகுதிகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிலப்பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
25 இடங்களில்
சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் 8 லட்சத்து 80 ஆயிரத்து 425 எண்ணிக்கை செடிகள் விவசாய நிலம், தரிசு நிலம், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் காப்புக்காடுகள் உள்ளிட்ட நிலப்பகுதிகளில் நடவு செய்யப்பட உள்ளது. இதற்கான நாற்றங்கால் மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு மரக் கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
நிகழ்ச்சியில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மண்டல வனப் பாதுகாவலர் பெரியசாமி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட வன அலுவலர் (ஆத்தூர் சரகம்) சுதாகர், மின்னாம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆவரணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.