பாடப்புத்தகம் அச்சிடுபவர்களுக்கு கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை


பாடப்புத்தகம் அச்சிடுபவர்களுக்கு கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை
x

பாடப்புத்தகம் அச்சிடுபவர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

விருதுநகர்

சிவகாசி,

பாடப்புத்தகம் அச்சிடுபவர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

கலந்துரையாடல்

தமிழ்நாடு பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்கம் சார்பில் சிவகாசியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாடநூல் அச்சிட்டு வினியோகம் செய்வதில் உள்ள பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.

100 சதவீதம்

பின்னர் திண்டுக்கல் ஐ. லியோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு தேவையான பாடப்புத்தகங்களில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் தயார் செய்யப்படுகிறது. 10 சதவீத பாடப்புத்தகங்கள் மட்டும் வெளி மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. 10 சதவீதம் பாடப்புத்தகம் வெளி மாநிலத்தில் அச்சிடுவதால் சிவகாசி அச்சகத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதனால் இனி வரும் காலத்தில் 100 சதவீதம் பாடப்புத்தகங்களும் சிவகாசி பகுதியில் தயாரிக்க தேவையான நடவடிக்கையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று எடுக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளேன்.

கூலி உயர்வு

அதேபோல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசி நிலவரத்தின் அடிப்படையில் பாடநூல் தயாரிப்பு கூலி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வால் 20 முதல் 30 சதவீதம் வரை கூலி உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று கூலியை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே சிவகாசியில் தான் தரமான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இதனால் சிவகாசி அச்சகங்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சிவகாசி எம்.எல்.ஏ அசோகன், அச்சக உரிமையாளர்கள் உதயகுமார், குமரேசன், கற்பகா ஜெய்சங்கர், மணி, இன்பம், தினேஷ் மாறன், ராஜேஷ், வெயில் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story