சாலையின் முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை


சாலையின் முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை
x

விபத்துகளை தடுக்க சாலையின் முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை

விபத்துகளை தடுக்க சாலையின் முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.

வாகன ஓட்டிகள் அச்சம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நேற்று முன்தினம் இரவு காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், சில நாட்களுக்கு முன்பு செங்கம் பக்கிரிபாளையம் பகுதி பைபாஸ் சாலையில், காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

அந்த விபத்திலும், கார் அப்பளம்போல நொறுங்கியதில் காரில் பயணித்த குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

டி.ஐ.ஜி. ஆய்வு

இந்த நிலையில் வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்கள் செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஏற்கனவே சாலை விபத்துகள் நடந்த இடங்களை பார்வையிட்டனர். சமீபத்தில் நடந்த விபத்து தொடர்பாகவும் டி.ஐ.ஜி. முத்துசாமி விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து அய்யம்பாளையம், பெரியபாளையம்பட்டு, சின்னபாளையம்பட்டு, பெரியகுளம், பாய்ச்சல் உள்ளிட்ட பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை சென்று அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் விபத்து எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும், அங்கு விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஒளிரும் மின்விளக்குகள்

இதுகுறித்து டி.ஐ.ஜி.முத்துசாமி கூறியதாவது:-

விபத்துகளை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல இடங்களில் எஸ் வடிவம் கொண்ட வளைவு சாலைகள் அதிகம் உள்ளது. எனவே அந்த சாலைகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கம் பகுதியில் உள்ள மெயின் சாலையில் பல்வேறு கிராம சாலைகள் இணைக்கும் பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அந்த பகுதிகளில் கூடுதலான வேகத்தடைகள் அமைக்க தெரிவிக்கப்பட்டது.

மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் பிளிங்கர்ஸ் ஸ்டிக்கர்ஸ், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அணைந்து ஒளிரும் சிகப்பு நிற பிளிங்கர்ஸ் விளக்குகளும் பொருத்தப்படும். வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு நீண்ட சாலையில் ஆங்காங்கே பேரிகாா்டுகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சாலையில் பேரிகார்டு வைக்கப்படும். சிறிய சாலையின் ஓரம் சாலையை மறைக்கும் வகையில் உள்ள செடிகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர சில இடங்களில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story