கிராமம், நகரங்களை குப்பை இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை
கிராமம் மற்றும் நகரங்களை குப்பை இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லால்புரத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
சிதம்பரம்
கிராம சபை கூட்டம்
சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் அதன் தலைவர் லால்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மலர்விழி, வார்டு உறுப்பினர்கள் கவிதா, மஞ்சுளா, ரத்தினவள்ளி, ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி, மக்களை தேடி மருத்துவம் தி்ட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-
புதிய நகரம் உருவாகும்
பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமங்களின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். லால்புரத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்தை மேற்கொள்ளும் ஊராட்சியாக லால்புரம் செயல்பட்டு வருகிறது.
தற்போது லால்புரம் பகுதியில் அமைய உள்ள புதிய பஸ் நிலையத்தால் சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். 5 ஆண்டுகளுக்குள் லால்புரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களும் புதிய நகர பகுதியாக உருவாகும். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடையும் வாய்ப்பை தமிழக முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பணம் வராதவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பணம் வரும். மகளிருக்கு உரிமை தொகையை தமிழக முதல்-அமைச்சர் கொடுத்துள்ளது ஒரு சாதனையாகும்.
குப்பை இல்லாத நகரமாக, கிராமமாக மாற்றுவதற்கு பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் மூலம் சேமித்து, மகளிர் திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் உருவாக்கும் கூடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தார் சாலை அமைக்கும் பணியும் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் வார்டு உறுப்பினர்கள் தமிழ் முல்லை, ரூபா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், லால்புரம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் லதா, ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், கவுன்சிலர் அப்பு.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.