உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
கோட்டூர் பகுதியில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
கோட்டூர் பகுதியில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ளது. பாசனத்துக்கு முதல் முறையாக மேட்டூர் அணை முன்னதாக மே மாதம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதுமான தண்ணீர் கிடப்பதால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது.
உரத்தட்டுப்பாடு
இந்த நிலையில் கோட்டூர் பகுதியில் பயிர்கள் வளர்ச்சிக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான தண்ணீர் கிடைத்த நிலையில் உரங்கள் தட்டுப்பாடு காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோட்டூர் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
தனியார் உரக்கடைகள் உரங்களை பதுக்கி வைத்து தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். எனவே தமிழக அரசு தட்டுப்பாடியின்றி யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு உரங்களை பெற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தனியார் உரக்கடைகளை அரசு ஆய்வு செய்து உரத்தை பதுக்கிவைத்து செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.