58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் பகுதியில் கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் பகுதியில் கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x

58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் பகுதியில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

மதுரை

உசிலம்பட்டி,

58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் பகுதியில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி துணை தாசில்தார் தாழமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்துறை, வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பேசும்போது, உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தை அழிக்கும் நோக்கில் 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உசிலம்பட்டி சந்தை பகுதியில் குளம் போல தேங்கி உள்ள நீரால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாய நிலை நீடிப்பதாகவும், வரும் காலம் மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ள சூழலில், போர்கால அடிப்படையில் நீரை அகற்றவும், மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அரசு அதிகாரிகளும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உறுதியளித்தனர்.

பேரையூர்

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணை தாசில்தார்கள் மயிலேறி நாதன், கிஷோர் ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். மேலும் தங்கள் குறைகள் குறித்து பேசினார்கள். அணைக்கரைப்பட்டி, சாப்டூர், பகுதியில் பட்டா கேட்டு 168 பேர் மனு கொடுத்ததற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், சாப்டூரில் வண்டி பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டது.

தோட்டக்கலை துறையில் விவசாயிகளுக்கு தரப்படும் மானியம் குறித்து அலுவலர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கோழிகளுக்கு வரும் நோய்கள் குறித்தும், அதை தடுக்கும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு பெரும்பாலான அரசு அலுவலர்கள் வருவதில்லை என்று விவசாயிகள் கூறினர்.


Next Story