பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

ஆந்திர மாநில முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் சென்னை புறநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவை குறைக்கும் வகையில், அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அம்மாநில முதல்-மந்திரி பேசியுள்ளது தமிழ்நாட்டு மக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில், கனகநாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு அணையின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உள்ளதாகவும், இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும்; குடிப்பள்ளியில் 0.77 டி.எம்.சி. மற்றும் சாந்திபுரத்தில் 0.33 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க 2 அணைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்; இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசி இருக்கிறார். இது ஊடகங்களில் செய்தியாக வெளி வந்துள்ளது.

ஆந்திர மாநில முதல்-மந்திரி தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆந்திர மாநில முதல்-மந்திரியுடன் நல்லுறவு வைத்திருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து அவருடன் பேசி, மேற்படி 2 அறிவிப்புகளையும் ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story