நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் சாதி சான்று வழங்க நடவடிக்கை
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பழங்குடியினர் சாதி சான்றிதழ்
பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உதவி கலெக்டர்கள் நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவாக வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள இந்த சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழை மின் வடிவிலான முறையில் பெற்றுள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு புதிய மின் வடிவிலான சாதி சான்றிதழை வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அட்டை வடிவிலான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வைத்து இருப்பவர்களின் சாதி சான்றிதழை ரத்து செய்து பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய இணைய தொகுப்பு உருவாக்கப்பட்ட நிலையில் நரிக்குறவர் குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார ஆவணங்கள்
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து பழங்குடியினர் சமுதாயத்திற்கு மாற்றப்படுவதாக மத்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட 3.1.2023-ம் நாளிலிருந்து இந்த சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். எனவே புதியதாக குருவிக்காரர், நரிக்குறவர் சாதி சான்றிதழ் பெற தகுதி உள்ள நபர்கள் உரிய ஆதார ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழை அட்டை வடிவில் வைத்திருப்பவர்கள் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து இ- சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை தாசில்தார்களும் தங்கள் தாலுகா கட்டுப்பாட்டில் உள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரர், நரிக்குறவர் சாதி சான்றிதழ் அட்டை பெற்று இருந்தால் அதை ரத்து செய்து இ-சாதி சான்றிதழ் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.