தி.மு.க. ஆட்சியில் ஆவினில் 7 சதவீதம் விற்பனை அதிகரிப்பு: விழுப்புரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி


தி.மு.க. ஆட்சியில் ஆவினில் 7 சதவீதம் விற்பனை அதிகரிப்பு: விழுப்புரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 12:12 PM GMT)

தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் 7 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பழனி வரவேற்றார். பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் வினித், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார். தொடர்ந்து, 41 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஆவின் பொது மேலாளர் ராஜேஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

ஆவின் நிறுவனத்தில் ஆய்வு

முன்னதாக விழுப்புரம் ஆவின் நிறுவனத்திற்கு சென்ற அவர், அங்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு பால் சார்ந்த உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், பால் பதனிடும் அறை, பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

7 சதவீதம் விற்பனை அதிகரிப்பு

படித்து பட்டம் பெற்று வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு வங்கி மூலம் கடனுதவி பெற்று சிறு, குறு பால் உற்பத்தியாளராக உருவாக கால்நடைத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும். இதை இளைஞர்கள், விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் போதுமான அளவில் இல்லை. எங்கெங்கு கூட்டுறவு சங்கங்கள் தேவையோ அங்கு கூட்டுறவு சங்கங்களை தொடங்க அறிவுறுத்தப்பட்டு அந்த பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். அதுமட்டுமல்ல கால்நடை வளர்ப்போருக்கு தேவையான கடனுதவிகளை செய்து கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக வங்கியாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி கடனுதவிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பால் கொள்முதல் என்பது மிக குறைவாக இருந்தது. தற்போது படிப்படியாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது நல்ல முன்னேற்றத்தை காட்டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் நிறுவனத்தில் 7 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

பால் கொள்முதல் விலை

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் நிலுவைத்தொகையை விரைந்து வழங்குவது, வாரந்தோறும் பணப்பட்டுவாடா செய்வது போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவின் பொருட்கள் அனைத்தும் 100 சதவீதம் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் 20 சதவீதம் கூடுதலாக ஆவின் பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story