செயற்கை இழை ஓடுதளம் அமைக்க தரைமட்டத்தை உயர்த்த நடவடிக்கை


செயற்கை இழை ஓடுதளம் அமைக்க தரைமட்டத்தை உயர்த்த நடவடிக்கை
x

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைப்பதற்காக தரைமட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை

மாவட்ட விளையாட்டரங்கம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் அதிக அளவில் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி அளவிலான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இதுதவிர கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடைபெறும். விளையாட்டரங்கத்தில் தடகளத்தில் ஓட்டபந்தயத்திற்கான பாதை சாதாரண மண்தரையாக உள்ளது. இதில் ரூ.7 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தரைமட்டம் உயர்த்தப்படும்

இந்த நிலையில் செயற்கை இழை ஓடுதளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "செயற்கை இழை ஓடுதளமானது 400 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும். இந்த ஓடுதளமானது ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்த வசதியாக இருக்கும். மைதானத்தின் நடுவே உள்ள கால்பந்து மைதானத்திற்கு புற்கள் வசதி ஏற்படுத்தப்படும்.

இந்த நிலையில் மைதானத்தை ஒட்டி குளம் உள்ள நிலையில் மழை காலத்தில் மைதானத்தில் அதிகம் தண்ணீர் தேங்குகிறது. இதனால் செயற்கை இழை ஓடுதளம் அமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது. அதில் மழை நீர் தேங்காத வகையில் இருக்க வேண்டும். இதனால் மைதானத்தில் மண்தரைமட்டத்தை சற்று உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. தரையை உயர்த்தி அதில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றனர்.


Next Story