கோவிலை சுற்றி அமைத்த கம்பிவேலியை அகற்ற நடவடிக்கை


கோவிலை சுற்றி அமைத்த கம்பிவேலியை அகற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:45 PM GMT)

ஆச்சிப்பட்டியில் கோவிலை சுற்றி அமைத்த கம்பிவேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆச்சிப்பட்டியில் கோவிலை சுற்றி அமைத்த கம்பிவேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோவில் திருவிழா

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது ஆச்சிப்பட்டி உள்பட 7 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆச்சிப்பட்டி கிராமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவிலாகும். இந்த கோவில் ஆச்சிப்பட்டி, கிட்டசூராம்பாளையம், குள்ளக்காபாளையம், நஞ்சேகவுண்டன்புதூர், ஒக்கிலிபாளையம், ஆ.சங்கம்பாளையம், போத்தனூர் ஆகிய 7 ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 15 நாட்களுக்கு மேலாக திருவிழா நடைபெறும். விழாவில் நேர்த்திக்கடன், பூவோடு உள்ளிட்டவைகளை தற்போது கம்பி வேலி அமைத்து உள்ள இடத்தில் வைத்துதான் 100 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறோம். சித்திரை மாதம் 1-ந்தேதி அம்மனுக்கு தீர்த்தம் விடும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். தற்போது கோவிலை சுற்றி கம்பிவேலி அமைந்து உள்ளதால் திருவிழா நடத்துவதற்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே இரு முறை மனு கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே கம்பி வேலியை அகற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதிகள்

பா.ஜனதாவினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் உள்ள லாரி பேட்டையில் லாரிகளுக்கு பழுதுபார்க்கும் பணிமனைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் சுகாதாரம் இல்லாததால் பணிபுரிபவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். லாரிபேட்டையில் மழைக்காலங்களில் தரை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும் தூசி, மணல் பறப்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தார் தளம் அமைத்து கொடுக்க வேண்டும். கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

காதலர்களுக்கு பாதுகாப்பு

மக்கள் விடுதலை முன்னணியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை ஆகிய சுற்றுலா தலங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினத்தன்று அதிகளவில் காதலர்கள் வந்து செல்வார்கள். ஒரு சில இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் காதலர்களுக்கு ராக்கி கட்டி விடுவது, கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைப்பது, விலங்குகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றனர். காதலர் தினத்தை சாதி, மொழி, இனம் கடந்து காதலிக்கும் காதலர்கள் கொண்டாட உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story