ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை


ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

ராமநாதபுரத்தில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. உறுதிமொழிக்குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாத்துரை, அருள், கருணாநிதி, ரூபி மனோகரன், ராமலிங்கம், வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. அரசின் சார்பில் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தினார். இதைதொடர்ந்து அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் உறுதிமொழிகள் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும். பணிகளை முடிப்பதில் காலதாமதத்தால் பொருட்களின் விலை உயர்ந்து அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இது ஒருவகையில் அரசுக்கு இழப்பாக உள்ளது.

ராமநாதபுரம் பின்தாங்கிய மாவட்டம் என கூறினாலும், திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மேல்நிலைப்பள்ளி

அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம். அதற்கு அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கவும், ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் கோரி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 155 உறுதிமொழிகள் அரசால் அறிவிக்கப்பட்டு 63 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 77 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 பணிகளுக்கு ஒப்புதல் பெற நிலுவையில் உள்ளது. விரைவில் அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்றிட இக்குழு முனைப்புடன் செயல்படும். இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் 25 பயனாளிகளுக்கு இ-பட்டா மற்றும் 36 பயனாளிகளுக்கு ரூ.3.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வேல்முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, உறுதிமொழிக்குழு செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story