385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கைகலெக்டர் கார்மேகம் தகவல்


385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கைகலெக்டர் கார்மேகம் தகவல்
x

385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்

சேலம்,

விளையாட்டு போட்டி

சேலம் மாவட்ட ஊரக பகுதிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கான கருத்தரங்கம் நேற்று அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டில் ஊக்கமளித்து, அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சென்னகிரி ஊராட்சியில் கைப்பந்து, கோ -கோ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கான ஊரக விளையாட்டு மைதானம் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மைதானம் போல் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆரோக்கியமான சமுதாயம்

மாணவ, மாணவிகள் மனஅழுத்தங்களை குறைக்கும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். வகுப்பறையில் விளையாட்டிற்கென ஒதுக்கப்படும் நேரத்தை மற்ற பாடங்களுக்காக எடுத்துக்கொள்ளாமல் மாணவர்களை கண்டிப்பாக விளையாட அனுமதிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு, மாணவ, மாணவிகளுக்கு சிறந்த ஒழுக்கத்தை கற்றுத்தரும். காலை, மாலை இருவேளைகளிலும் விளையாட்டில் ஈடுபட்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைய தலைமுறையினருக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் போது எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய தேவைகள் குறையும். ஆரோக்கியமான சமுதாயத்தை அடைய வழிவகுப்பதோடு, எந்த பாகுபாடுமின்றி அனைவரையும் ஒருங்கிணைக்கும் மையமாக விளையாட்டு மையம் திகழ்கிறது. அதன்படி ஆரோக்கியமான கிராம சமுதாயத்தை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஊராட்சி உதவி இயக்குனர் தமிழரசி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story