வெள்ளலூர் குப்பை பிரச்சினைக்கு 15 மாதங்களில் தீர்வு காண நடவடிக்கை
வெள்ளலூர் குப்பை பிரச்சினைக்கு 15 மாதங்ளில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் கூறினார்.
வெள்ளலூர் குப்பை பிரச்சினைக்கு 15 மாதங்ளில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் கூறினார்.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஆய்வு
கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பழைய குப்பைகளை தரம் பிரிக்கும் இடம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் இடம், உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அவர், நேற்று ஒண்டிப்புதூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நீதிபதி ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களுக்கு பிரச்சினை
வெள்ளலூர் குப்பை கிடங்கை கடந்த 2020 ஜனவரியில், ஆய்வு செய்தேன். அங்கு நேற்றும் (நேற்று முன்தினம்) ஆய்வு செய்தேன். அப்போது பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை தெரிவித்த னர். குப்பை கிடங்கால் கடந்த 20 ஆண்டுகளாக மக்களுக்கு பிரச்சினை உள்ளது. 2019 -ம் ஆண்டு தீர்ப்பின் படி குப்பைகளை முழுமையாக அகற்றி இருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா காரணமாக குப்பைகள் அகற்ற முடிய வில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களுக்கும் கலந்து கொண்டனர். குப்பை கிடங்கு பிரச்சினையை 15 மாதங்களில் தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான உத்தரவாதத்தை மாநகராட்சி ஆணை யாளர் கொடுத்து உள்ளார். ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்ற மாநகராட்சி மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கை வழங்க வேண்டும்.
15 மாதம் கால அவகாசம்
மாநகராட்சியில் மொத்தம் 64 நுண் உர தயாரிப்பு மையம் அமைக்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதில் 34 நுண் உர தயாரிப்பு மையம் அமைத்து உள்ளனர். அதில் 12 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்ற மைய பணிகளை 4 வாரத்தில் முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.
வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு முழுமையான தீர்வு காண 15 மாதம் கால அவகாசம் கொடுத்துள்ளோம். அதை நானும் நேரில் கண்காணிப்பேன். வடவள்ளியில் உள்ள நுண் உர தயாரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அந்த மையத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். நுண் உர தயாரிப்பு மையம் அமைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். நுண் உர தயாரிப்பு மையம் மூலம் எந்த பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.