இளைஞர்களை வெற்றிகரமானதொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை


இளைஞர்களை வெற்றிகரமானதொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை
x

‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இளைஞர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலெக்டர் மோகன் கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் 'நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளுக்கான மண்டல அளவிலான பயிலரங்கம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரால் 'நான் முதல்வன்" திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இதற்கென பிரத்யே இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது சிறப்புத்திட்ட அமலாக்கத்துறையின்கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுமை மேம்பாட்டு படிப்புகள், ஆங்கில புலமையை மேம்படுத்தும் படிப்புகள், போட்டித்தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், நேர்முகத்திறன், தகவல் தொடர்பு திறன், குழுப்பணித்திறன், தொழில்முனைவோர் திறன் போன்ற பயிற்சிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தொழில் முனைவோராக...

இளைஞர்களுக்கு இடையேயுள்ள திறன் இடைவெளிகளை பகுப்பாய்வு செய்தும் அவர்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றுவதற்கு பொருத்தமான திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொறியியல் மாணவர்களுக்கு முதல்கட்டமாக படிப்புகள் மற்றும் தொழில்சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தகவல்களை வழங்குவதையும், மாணவர்கள் தொழில் இலக்குகளை அடைய உதவிடவும் ஆர்வமுள்ள துறையில் சிறந்த வேலைவாய்ப்பை பெறும் வகையில் பயனுள்ள தகவல்கள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் அடங்கிய மண்டல அளவிலான பயிலரங்கம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தை அனைத்து கல்லூரி முதல்வர்களும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story