மாணவர்களை ஏற்றாமல் சென்றால் அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை
மாணவர்களை ஏற்றாமல் சென்றால் அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூரில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூர், மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, காராமணிக்குப்பம், வரக்கால்பட்டு, எஸ்.குமராபுரம், தோட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தினசரி அரசு டவுன் பஸ்களில், பாஸ் மூலம் இலவச பயணம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவர்களை கண்டால், அரசு பஸ்களை நிறுத்தாமல் டிரைவர்கள் ஓட்டிச்சென்றனர். இதனால் மாணவர்கள் தனியார் பஸ்களில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களை கடலூர் தாசில்தார் பூபாலசந்திரன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி கடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. தலைமையிடத்து துணை தாசில்தார் அமர்நாத், மண்டல துணை தாசில்தார் அசோகன், வருவாய் ஆய்வாளர்கள் உதயசந்திரன், செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் சென்று வர வேண்டும் எனவும், கொங்கராயனூர், மேல்பட்டாம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் அரசு பஸ்கள் அனைத்தும் நின்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றி செல்ல வேண்டும் எனவும், மீறி செயல்பட்டால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கடலூர் கிளை மேலாளர் மூலம் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதனை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டதால் சுமூக தீர்வு காணப்பட்டது. இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், கிளை மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.