10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் முதன்மை மாவட்டமாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்-தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை


10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் முதன்மை மாவட்டமாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்-தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் முதன்மை மாவட்டமாக திகழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது கடந்தாண்டு பொதுத்தேர்வு மற்றும் நடப்பாண்டு காலாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்ச்சி விகிதத்தை உயர்த்த

தற்போது மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ- மாணவிகள் சிறப்பான முறையில் பொதுத்தேர்வை எழுதவும், நூறு சதவீதம் தேர்ச்சி விகிதம் கிடைக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் மொழிப்பாடங்கள் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, செய்முறை பயிற்சி வகுப்புகள், பேச்சுப்போட்டி, தனித்திறன் போட்டிகளில் கவனம் செலுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் முன்னேற்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும்.

மின்சாதனங்கள் சரியாக இருக்க வேண்டும். கழிப்பிட வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். என்.எம்.எம்.எஸ்., நீட் தேர்வு போன்றவற்றிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பு பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகளை மாணவ-மாணவிகளுக்கு விரைந்து வழங்கி முடிக்க வேண்டும்.

முதன்மை மாவட்டமாக திகழ

அனைத்து பள்ளிகளிலும் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் போன்றவற்றை தவறாமல் பள்ளிகளில் நடத்த வேண்டும். 2023-2024-ம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதன்மை மாவட்டமாக திகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு தொடர்ந்து வரச்செய்ய வேண்டும்.

அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அதனை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தொய்வு ஏற்படும் பள்ளிகளை பார்வையிட்டு தேர்ச்சி விகிதத்தை உயர்த்த முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவசுப்பிரமணியம், மகாலட்சுமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story