விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை- விதை பரிசோதனை அலுவலர்
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விதை பரிசோதனை அலுவலர் கூறினார்.
திருவாரூர்:-
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விதை பரிசோதனை அலுவலர் கூறினார்.
ஆய்வு
திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் மதுரை சரக விதை பரிசோதனை அலுவலர் (பொறுப்பு) ராமசாமி நடப்பு ஆண்டிற்கான விதை பரிசோதனை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு மற்றும் விதை பரிசோதனை நிலையத்தில் உள்ள உபகரணங்கள், கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள், பணி விதை மாதிரி விதைகள் மற்றும் அதன் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகளை ஆய்வு செய்தார்.
விதை மாதிரிகள்
இதுகுறித்து அவர் கூறுகையில், 'திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் 616 சான்று விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 43 மாதிரிகள் தரக்குறைவு என அறிவிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற 573 மாதிரிகள் விதைச்சான்று உதவி இயக்குனர் மூலம் சான்றட்டைகள் பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தரமற்ற விதை மாதிரிகளுக்கு விதை ஆய்வாளர் மூலம் விற்பனை தடை வழங்குவது தொடர்பான முடிவுகள் ஸ்பெக்ஸ் இணையதளம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி ரகங்கள்
நடப்பு சாகுபடி பருவத்துக்கு தேவையான விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு விரைவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டு மேட்டூர் அணை முன் கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால் குறுவை ரகங்களான ஏ.டி.டீ-43, ஏ.டி.டீ-45, ஏ.டி.டீ-36, ஏ.டி.டீ-53, ஏ.டி.டீ37, எ.எஸ்.டி.18, எ.எஸ்.டி-16 ஆகிய குறுவை சாகுபடி ரகங்களின் மாதிரிகளை உரிய காலத்தில் ஆய்வு செய்து முடிவுகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி, வேளாண்மை அலுவலர் சிவசக்தி, உதவியாளர் வனஜா ஆகியோர் உடன் இருந்தனர்.