மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை


மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசால் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெகடர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

தமிழக அரசால் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெகடர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

சுய உதவிக்குழு

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியன சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தலைமை தாங்கினார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசும்போது கூறியதாவது:- மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான மொத்த விற்பனையாளர்கள், மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு நடத்துவதற்கான நிலைத்த வழிகாட்டி நெறிமுறைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துதல், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இடையேயான தங்களது உற்பத்தி பொருட்களுக்கு ஒரு விற்பனைத் தளம் அமைந்துள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துதல்.

இணையதளம் வாயிலாக

இடைத்தரகர்கள் இன்றி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தல் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உற்பத்தியாளர் குழு, பண்ணை சாரா சிறு தொகுப்பில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எனவே, மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தி பொருட்களை இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளும் துறை ரீதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு சந்தைப்படுத்துவதற்காக கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருட்களை, மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம்) வேல்முருகன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story