நடிகர் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி சுட்டார்


நடிகர் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி சுட்டார்
x

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி சுட்டார். அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி சுட்டார். அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம்பிரிக்கப்பட்டு சப்-யூத் 16 வயது வரை, யூத் 19 வயது வரை, ஜூனியர் 21 வயது வரை, சீனியர் 21 முதல் 45 வயது வரை, மாஸ்டர் 45 முதல் 60 வயது வரை மற்றும் சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்குமார் பங்கேற்பு

இந்தநிலையில் பிரபல திரைப்பட நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார். நேற்று காலை அவர் கே.கே.நகரில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றார். அங்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அவரை வரவேற்று போட்டியில் பங்கேற்க வைத்தனர். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய 3 பிரிவுகளிலும் அஜித்குமார் பங்கேற்று இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க நடிகர் அஜித்குமார் திருச்சி வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் நேற்று காலை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் திரண்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்று போட்டியிலும் பங்கேற்றுவிட்டு அஜித்குமார் வெளியே வந்தபோது, ரைபிள் கிளப் வெளியே குவிந்து இருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

ரசிகர்கள் திரண்டனர்

அவரும் ரசிகர்களை பார்த்து இருகட்டை விரல்களை தூக்கி வெற்றி பெற்றதுபோன்ற சைகை செய்தார். இதை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் அஜித்குமாரை செல்போன்களில் படம் பிடித்தனர். மேலும், ஒரு சில ரசிகர்கள் ஆர்வத்துடன் ரைபிள் கிளப்பில் போட்டி நடைபெறும் அரங்கிற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அஜித்குமாருடன் செல்பி எடுத்து கொள்ள போட்டி போட்டு முண்டியடித்ததால் அங்கு லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்று ஒரு அறையில் அமர வைத்தனர். அதன்பிறகு சிறிதுநேரம் கழித்து அவர் வெளியே வந்து மீண்டும் அடுத்த சுற்று போட்டியில் பங்கேற்றார். திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்குமார் பங்கேற்றுள்ள தகவலை அவரது ரசிகர்கள் வாட்ஸ்அப் மூலம் அனைத்து குழுக்களிலும் பரப்பி வருகிறார்கள். இதையொட்டி அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தகுதி சுற்றுக்கு முன்னேறுபவர்கள் தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க முடியும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story