மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஆர்யா
எட்டயபுரம் அருகே மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி நடிகர் ஆர்யா பிறந்தநாள் கொண்டாடினார்.
எட்டயபுரம்:
குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன், தேவராட்டம் ஆகிய கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவர் தற்போது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் ஆர்யா, பிரபு, நடிகை ஷித்தி இதானி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதன் படிப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது.
நடிகர் ஆர்யா தனது 41-வது பிறந்த நாளை படப்பிடிப்பு நடந்த எட்டயபுரம் அருகே உள்ள கீழஈராலில் படக்குழுவினருடன் நேற்று முன்தினம் மாலை கொண்டாடினார். அவர் ஆர்யா என்ற தனது பெயரின் ஆங்கில எழுத்துக்கள் வடிவிலான 'கேக்'கை வெட்டி கொண்டாடினார். படக்குழுவினர் ஒவ்வொருவராக ஆர்யாவுக்கு 'கேக்' ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் படப்பிடிப்பு நடந்து வரும் குறிஞ்சான்குளம், ஆராய்ச்சிபட்டி, இளவேலங்கால் உள்ளிட்ட கிராமங்களில் படிக்கும் தாய் அல்லது தந்தையரை இழந்த 10 மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபு, நடிகை ஷித்தி இதானி, இயக்குனர் முத்தையா உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.