போலீசாரால் தாக்கப்பட்ட நடிகர் கார்த்தி ரசிகர்கள் 3 பேருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு


போலீசாரால் தாக்கப்பட்ட நடிகர் கார்த்தி ரசிகர்கள் 3 பேருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு
x

போலீசாரால் தாக்கப்பட்ட நடிகர் கார்த்தி ரசிகர்கள் 3 பேருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை,

தூத்துக்குடி எஸ்.எம்.புரத்தைச் சேர்ந்த வக்கீல் கவாஸ்கர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த தோழா படம் வெளியானபோது, அவரது ரசிகர்களான எனது சகோதரர்கள் வெங்கடேஷ் (தூத்துக்குடி மாவட்ட கார்த்தி ரசிகர் மன்ற தலைவர்), வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோர் தூத்துக்குடியில் போஸ்டர் ஒட்டினர். அப்போது லஞ்சம் கேட்டு தர மறுத்ததால் அவர்களை மத்திய பாகம் போலீஸ் ஏட்டு திரவிய ரத்தினராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஆபாசமாக திட்டி, தாக்கினர். இதில், அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். எனவே, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், 'பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு ரூ.5 லட்சமும், வெங்கடேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த தொகையை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், ஏட்டு திரவிய ரத்தினராஜ் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வசூலித்துக்கொள்ளலாம். மேலும், அவர்கள் 3 பேர் மீதும் குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


Next Story