அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்


அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

லால் சலாம்

பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் லால் சலாம் பட காட்சிகள் திருவண்ணாமலையில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பட காட்சிகளில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்து தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

கடந்த 26-ந் தேதி முதல் திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் உள்ள தனியார் பண்ணை வீடு மற்றும் விவசாய நிலத்தில் பட காட்சி எடுக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்தார்.

சாமி தரிசனம்

லால் சலாம் பட காட்சிகள் இன்றுடன் திருவண்ணாமலையில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து செஞ்சி மற்றும் புதுச்சேரியில் லால் சலாம் பட காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் வழியாக கோவிலுக்குள் சென்ற அவர் சாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.

செல்பி எடுக்க ஆர்வலம்

ரஜினிகாந்த் கோவிலுக்குள் வந்த தகவலறிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் திரண்டனர்.

சிலர் அவருடன் செல்பி புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

இதனால் கோவில் வளாகத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினிகாந்துடன் வந்திருந்தவர்கள் அவரை பாதுகாப்புடன் கோவிலில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

பின்னர் அம்மணி அம்மன் கோபுரம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஏறி அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

அருணாசலேஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்.

தற்போது சனி பிரதோஷ நாளான இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story