நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா கார் சாவி மாயம்; போலீசில் புகார்


நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா கார் சாவி மாயம்; போலீசில் புகார்
x

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவின் கார் சாவி மாயமாகி விட்டது. இதனை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் அவர் புகார் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா. சினிமா இயக்குனராக உள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

கார் சாவி மாயம்

சவுந்தர்யா 'ரேஞ்ச் ரோவர்' என்ற விலை உயர்ந்த காரை பயன்படுத்தி வந்தார். அந்த காரின் சாவி திடீரென மாயமாகி விட்டது.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் சாவி கிடைக்கவில்லை. இந்த வகை கார் சாவி தொலைந்து போனால் அதற்கு முறைப்படி போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் கார் நிறுவனத்திடம் இருந்து மாற்றுச்சாவி வாங்க முடியும்.

போலீசில் புகார்

எனவே தனது கார் சாவி மாயமானது தொடர்பாக சவுந்தர்யா தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் கடந்த மாதம் 23-ந்தேதி தனது வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்றபோதுதான் காரின் 2 சாவிகளில் ஒன்று காணாமல் போய் விட்டது. மாயமான கார் சாவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் திருட்டு போன தங்கம், வைர நகைகளை தேனாம்பேட்டை போலீசார் கண்டுபிடித்து கொடுத்தனர். இது தொடர்பாக வேலைக்கார பெண் மற்றும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டனர். இந்த திருட்டு சம்பவத்தின் பரபரப்பு அடங்கிய நிலையில் தற்போது இளைய மகள் சவுந்தர்யாவின் கார் சாவி மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story