சொத்தில் பங்கு கேட்டு நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் ஐகோர்ட்டில் வழக்கு


சொத்தில் பங்கு கேட்டு நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் ஐகோர்ட்டில் வழக்கு
x

தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இரு மகள்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 1,000 பவுன் தங்கநகைகள், 500 கிலோ வெள்ளிப்பொருட்களையும் அபகரித்துக்கொண்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை,

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும், ராம்குமார், நடிகர் பிரபு என இருமகன்களும் உள்ளனர்.

இந்தநிலையில், சிவாஜிகணேசன் சுயமாக சம்பாதித்த சொத்துகளில் தங்களுக்கு பங்கு வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சாந்தி. ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

ரூ.270 கோடி சொத்துகள்

எங்கள் தந்தை சிவாஜி கணேசன் சம்பாதித்த சுமார் ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை தங்களது சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் முறையாக நிர்வகிக்கவில்லை.

வீடுகளின் வாடகை பங்கை எங்களுக்கு வழங்காமல் ஏமாற்றிவிட்டனர்.

1,000 பவுன் தங்க நகைகள்

பெரும்பாலான சொத்துகளை எங்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து எங்களை மோசடி செய்து விட்டனர்.

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சொத்துகளின் விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். இந்து வாரிசுரிமை சட்டப்படி தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் சமபங்கு உண்டு. அதனால், தந்தையின் சொத்துகளில் எங்களுக்கும் உரிமை உண்டு. அதனால், சொத்துகளை பாகப்பிரிவினை செய்து வழங்க வேண்டும். அத்துடன் 1,000 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்களை ராம்குமாரும், பிரபுவும் அபகரித்துக்கொண்டனர்.

போலியான உயில்

சாந்தி தியேட்டரில் இருந்த ரூ.82 கோடி மதிப்பிலான பங்குகளை ராம்குமாரும், பிரபுவும் தங்களது பெயர்களுக்கு மாற்றிக்கொண்டனர். எங்களது தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்துள்ளதாக ஒரு உயில் அவர்களிடம் உள்ளது. அந்த உயிலே போலியானது.

பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று எங்களை ஏமாற்றி விட்டனர். எனவே தந்தையின் சொத்துகளில் எங்களுக்குரிய பங்கை மீட்டு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இன்று விசாரணை?

இந்த வழக்கில் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளனர்.

இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் பலமுறை விசாரணைக்கு வந்து, இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story