நடிகர் விஜயகாந்துக்கு டூப் போட்டு நடித்தவர்: பூட்டிய வீட்டுக்குள் சினிமா சண்டை கலைஞர் பிணமாக மீட்பு


நடிகர் விஜயகாந்துக்கு டூப் போட்டு நடித்தவர்: பூட்டிய வீட்டுக்குள் சினிமா சண்டை கலைஞர் பிணமாக மீட்பு
x

நடிகர் விஜயகாந்த் உள்பட பல நடிகர்களுக்கு சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்த சினிமா சண்டை கலைஞர் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.

சென்னை

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது பிளாக்கில் வசித்து வந்தவர் மணி என்ற டூப் மணி (வயது 55). சினிமா சண்டை கலைஞரான இவர், சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார்.

'புலன் விசாரணை' படத்தில் நடிகர் விஜயகாந்த் உள்பட பல படங்களில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்து உள்ளார். மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டுக்குள் சென்ற மணி, அதன்பிறகு கதவை திறக்கவில்லை. அவரது வீடு பூட்டியே கிடந்தது. அவரது வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பூட்டிய வீட்டுக்குள் சினிமா சண்டை கலைஞரான மணி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக குடித்ததால் நாக்கு வறண்டு இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் மணியின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story