4 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி நடிகை கவுதமி புகார்
திருவண்ணாமலையில் 4 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி நடிகை கவுதமி புகார் செய்தார். இதுதொடர்பாக இருதரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலையில் 4 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி நடிகை கவுதமி புகார் செய்தார். இதுதொடர்பாக இருதரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
நடிகை கவுதமி புகார்
பிரபல நடிகை கவுதமி தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 8-ந் தேதி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்து அவர் மூலமாக திருவண்ணாமலையை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வாங்கப்பட்டது. 4 ஏக்கர் நிலத்தையும், முழுமையாக எனது பெயருக்கு பதிவு செய்யாமல், சரி பாதி நிலத்தை அவரது மனைவி நாச்சாள் பெயரில் பதிவு செய்துள்ளார்.
எனவே, அவரிடம் இருந்து 4 ஏக்கர் நிலத்தையும் முழுமையாக மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனித்தனியாக விசாரணை
அதைத்தொடர்ந்து இந்த புகார் மனு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக இருதரப்பினருக்கும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி தொழிலதிபர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் ஆகியோர் அவர்களது வக்கீலுடன் இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகினர்.
இதேபோல் நடிகை கவுதமி தரப்பில் அவரது வக்கீல்கள் ஆஜராகினர்.
இருதரப்பினரிடமும் குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்து ஐங்குணம் கிராமத்தில் வாங்கப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வருகிற 26-ந் தேதி அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்.