சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார்: கண்ணீர் மல்க பேட்டி


சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார்: கண்ணீர் மல்க பேட்டி
x

அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக விசாரணை நடைபெறவில்லை. சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார்.

சென்னை,

நடிகர் விஜய்யுடன் 'பிரண்ட்ஸ்' படத்தில் நடித்து பிரபலமானவர், நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார் என்று சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்தார். பின்னர், சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும், தனது ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்தார். தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டார்.

தன் மீதான இந்த புகாரை சீமான் பொருட்படுத்தவில்லை. இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி, சென்னையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றுவிட்டார். இந்தநிலையில் அவர், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு சீமான் மீது 4 பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் புகார் மனுவை அளித்தார்.

கண்ணீர் பேட்டி

பின்னர், நடிகை விஜயலட்சுமி நிருபர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீமான் என்னை மனைவியாக ஊரறிய ஏற்றுக்கொள்வேன் என்று பேச்சுவார்த்தை மூலம் கூறினார். எனவே நான் அவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகார் மனு மீதான வழக்கில் எந்தவிதமான மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் சீமான் என்னை ஏமாற்றி எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். எனவே அவர் மீதான அந்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டிருக்கிறேன். இதில் தி.மு.க. அரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதில்தான், என்னுடைய வாழ்வா, சாவா? முடிவு இருக்கிறது.

கோபத்துடன் புறப்பட்டார்

என்னுடைய புகார் மீது அ.தி.மு.க. ஆட்சியில் பெரிய அளவில் விசாரணை நடத்தப்படவில்லை. என்னை மட்டும் அழைத்து விசாரித்தார்கள். சீமானிடம் விசாரிக்கவில்லை. என்னுடன் சீமான் வாழ்ந்த 'வீடியோ'வை வெளியிட்டேன். அதில் அவர், என்னை பொண்டாட்டி என்று பேசி இருக்கிறார். தற்போது நான் ரொம்ப அவமானப்பட்டு இங்கே நிற்கிறேன்.

இறந்துவிடலாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் நான் வேறு எதற்காக இறந்து விட்டேன் என்று தகவல் வந்துவிடக் கூடாது. தற்போது என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. நிச்சயம், உறுதியாக சீமானை கைது செய்ய வைப்போம்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

பேட்டியின்போது கேள்வி எழுப்பிய ஒரு நிருபரை விஜயலட்சுமி தொடர்ந்து ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு நிருபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோபத்துடன் விஜயலட்சுமி புறப்பட்டு சென்றார்.


Next Story