பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படும்-போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்


பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படும்-போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்
x

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர்

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரியில் படிக்கின்றபோது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அந்த சிறப்புத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர ஏதுவாக பஸ் வசதியினை அதிகரிப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பள்ளி-கல்லூரி வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா பொருத்த வேண்டும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், தனியார் பள்ளி பஸ்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையினை ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு அதற்கான நடவடிக்கை தொடங்கி இருக்கிறது. எனவே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்வரை ஏற்கனவே பயன்படுத்திய இலவச பஸ் பயண அட்டைகளையே பயன்படுத்தி மாணவ- மாணவிகள் பயணிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story